அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் அடிப்படை உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்து விடுதலை, செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் குறித்து சர்வதேச பிரமானங்களுக்கு அமைவாக பல்வேறு காரணங்களை உதாரணம் காண்பித்து உரையாற்றிய சம்பந்தன் அரசாங்கத்தின் மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
மூன்று அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரம் இருக்கின்றமை தொடர்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போது சம்பந்தன் இவ்வாறு கூறினார். இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கம் தீவிரமான அக்கறை செலுத்த தவறுகின்றமையினால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருவதாகவும் சம்பந்தன் கவலை வெளியிட்டதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென அரசாங்கம் கூறமுடியாது என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையில், பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
ஆகவே அந்த வாக்குறுதிக்கு அமைவாக அச்சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என சம்பந்தன் அறிவுறுத்தியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட காலத்தில் தன்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று விடுதலை பெற்றிருப்பர்.
ஆனால் அவ்வாறு உரிய காலத்தில் தன்டனை வழங்கப்படாததால், அவர்கள் இன்று தன்டனைக்காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசியல் காரணங்களுக்காக சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கியிருந்தால், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.