யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மேன்முறையீட்டு மனுவை ஐந்து குற்றவாளிகள் சார்பாக சமர்ப்பித்திருந்த சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன அது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இதன்படி குறித்த படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குறித்த வழக்கின் மூலப் பிரதிகளான ஊர்காவற்றுறை நீதிவான் மன்ற வழக்குப் பதிவேடு மற்றும் தீர்ப்பாயத்தின் பதிவேடு என்பன சிங்கள மொழிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவை சுமார் 4 ஆயிரம் பக்கங்களைக் கொண்டவை என்றும் குறிப்பிட்ட அவர், அதற்காக குறைந்தது ஓராண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், 5 நீதியரசர்கள் அடங்கிய தீர்ப்பாய குழாமை பிரதம நீதியரசர் நியமித்து குறித்த குழாம் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும் என்றும் இதனால் வித்தியா கொலை தொடர்பான இறுதி தீர்ப்பு ஐந்து வருடங்களின் பின்னரே கிடைக்கும் என்றும் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மேலும் தெரிவித்தார்.