யாழ் பல்கலைக்கழக மாணவர்களே வணக்கம்-
உங்கள் போராட்டங்களுக்கு முதலில் மதிப்பளிக்கின்றோம். கடந்த வருடம் 20-10-2016 அன்று பொலிஸாரால் உங்கள் சக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாளை வெள்ளிக்கிழமை ஒரு வருடம். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா?
சரி- விடயத்திற்கு வருவோம். முன்னொரு காலத்தில் சரியான நெறிப்படுத்தல், வழிகாட்டல் போன்ற பண்புகளுடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நகர்வுகளை முன்நகர்த்திச் சென்ற பல்கலைக்கழக மாணவ சமூகம், இன்று தடம்மாறி நிற்பது ஏனோ?
இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவுடன் 1920இல் ஆரம்பித்த இன முரண்பாட்டை 1970 களுக்கு பின்னரான காலத்தில் அஹிம்சை வழியில் முன்னகர்த்திச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகம், இன்று தவறான அரசியல் சக்திகளின் வழி நடத்தலை நோக்கிச் செல்வதாக உங்கள், முன்னாள் மாணவர்கள், விரிவுரையாளர்கள் பலரும் கவலைப்படுகின்றனர்.
ஆகவே உங்களிடம் சில கேள்விகளும் விளக்கங்களும்–
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக எந்த அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேசினீர்கள்? அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆதரவாக போராட்டம் நடத்திய நீங்கள், பின்னர் போராட்டத்தை கைவிட்டு ஜனாதிபதியை சந்திப்பதற்கு தீர்மானம் எடுத்ததன் பின்னணி என்ன?
கைதிகளை விடுவிக்குமாறும் அவர்களின் வழக்கு விசாரணைகளை தமிழ் பிரதேசங்களில் நடத்த வேண்டும் என வலியுறுத்தயும் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கூட அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை.
இன்று வியாழக்கிழமை மாணவர்களுடன் கொழும்பில் நடத்தப்படவுள்ள சந்திப்பை காரணம் கூறி, நாடாளுமன்றத்தில் பதில் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் தப்பித்துக் கொண்டது. அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கின்ற தமிழரசுக் கட்சியின் மூத்த சட்டத்தரணிகள் கூட ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர் ஆகியோரை சந்தித்துப் பேசியும் தீர்வு இல்லை. சட்டச் சிக்கல் என்று ஒரே பதில்தான் வருகின்றது.
இந்த நிலையில் ஜனாதிபதியைச் சந்தித்து, அந்த சட்டச் சிக்கலை நீங்கள் எவ்வாறு மாற்ற முற்பட்டீர்கள்? சரி இன்றைய சந்திப்பில் உங்களுக்கு என்ன பதில் கிடைத்து? இங்குதான் முக்கியமான விவகாரம் ஒன்று உள்ளது. அதாவது கடந்த வருடம் இதே மாதம் 20 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு ஆண்டு நிறைவடைகின்றது. உங்களுக்கு ஞாபகம் உள்ளதா?
அந்த இரு மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராக போராட்டம் நடத்தி, பின்னர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினீர்கள். இறந்த மாணவர்கள் இருவருக்கும், தலா ஒரு கோடி ரூபாவும், வீடு கட்டிக் கொடுப்பட வேண்டும் எனவும் அவர்களின் சகோதரர்களில் ஒருவருக்கு அரச திணைக்களத்தில் வேலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தீர்கள்.
ஜனாதிபதி 50 இலட்சம் ரூபா கொடுக்கலாம் என்று சொன்னபோதும், பின்னர் உங்களின் கோரிக்கையை ஜனாதிபதி தயவோடு ஏற்ப்பதுபோல காண்பித்தார். ஆனால் இன்றுவரை மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா? மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணை கூட உரிய முறையில் நடத்தப்படவில்லையென்பது குறித்து நீங்கள் ஏதுவும் அறிந்தீர்களா?
நாளை ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் நீங்கள் இன்று வியாழக்கிழமை அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக சந்திருப்பது எந்த வகையான அணுகுமுறை? ஜனாதிபதியை சந்திப்பது குறித்து நீங்கள் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லையென உங்கள் விரிவுரையாளர்கள் சிலர் எம்மிடம் கவலை வெளியிட்டனர்.
எவ்வாறாயினும் உங்களின் தொடர்ச்சியான தேசப்பபற்று, அதற்கான ஜனநாயக வழியலான போராட்டங்கள் எதனையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையின் பின்னர், ஐக்கியதேசியக் கட்சியை ஆலாத்தி எடுக்கின்ற அரசியல் பண்புக்குள் நீங்கள் நுழைந்துவிடக் கூடாது என்றுதான் பலரும் விரும்புகின்றனர்.
தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த அரசியல் நியாயப்பாடுகளை மலினப்படுத்துகின்ற சில தமிழ் அரசியல் சக்திகளின் வலைப்பின்னலுக்குள் நீங்கள் சென்றுவிடவும் கூடாது. இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். நம்புகின்றனர்.
நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அதாவது பௌத்த கலாச்சாரத்தை மையப்படுத்திய இலங்கை அரசு என்ற கட்டமைப்பு, எந்தவொரு சிறிய விடயத்தையும் விட்டுக்கொடுக்க முன்வராது. சிலவேளை மைத்திரி ரணில் போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தங்கள் மனச்சாட்சியைத் தொட்டு தமிழர்களுக்கு ஏதும் செய்ய முற்பட்டாலும் அந்த பௌத்த பேரினவாதம் தடுத்துவிடும்.
எனவே 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் அழுங்கிப் போகாமல், மக்களை ஒன்று திரட்டி, புதிய அரசியல் பாதைக்கும், புதிய தலைமைத்துவத்திற்கும் ஏற்ற சமூகமாக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத் திட்டங்களை, கிராம மட்டத்தில் இருந்து, ஜனநாயக வழியில் முன்னெடுத்து, அடுத்த புதிய தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குரியது. உங்கள் மத்தியில் இருந்துதான் புதிய தலைமை தோற்றம் பெற வேண்டும் என மக்களும் எதிர்பர்க்கின்றனர்.
அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பறந்துவிடும்- வாழ்த்துக்கள்