ஸ்ரீலங்கா அரசியலில் புதிய அரசியல் யாப்பு என்ற விவகாரம் தொடர்ந்தும் பேசும் பொருளாகவே இருந்து வருகின்றது. சிங்கள பௌத்த மக்களின் மத தலைமை பிரிவான சீயாம் மகா நிக்காயாவை சேர்ந்த அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் உத்தேச அரியல் யாப்பை உடனடியாக கைவிடுமாறு மைத்திரி – ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த அமரபுர மற்றும் ராமான்ய தேசிய மத பிரிவுகளின் மகாநாயக்கர்கள் உத்தேச அரசியல் யாப்பு நாட்டை துண்டாடும் என்பதால் அதனை கைவிடுமாறு அரசிற்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில், உத்தேச அரசியல் யாப்பால் நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நேற்று வரை கூறிய சீயாம் பௌத்த மதத்தைச் சேர்ந்த மல்வத்து பீட மகாநாயக்கர் அவருக்கு கீழுள்ள பௌத்த பிக்குகளின் கடுமையான அழுத்தத்தையடுத்து அஸ்கிரிய பீடத்துடன் இணைந்து உத்தேச அரசியல் யாப்பிற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற மல்வத்து , அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் உட்பட பௌத்த பிக்குகளின் கூட்டத்தின் போது, பௌத்த மக்களின் முன்னுரிமை நீக்குவதற்கும் மற்றும் நாட்டை துண்டாடக் கூடிய வகையிலும் பரிந்துரைத்தல், உத்தேச அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படும் என விசனம் வெளியிடப்பட்டுள்ளதுடன், உடனடியாக அரசியல் யாப்பு பணிகளை கைவிடுவமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிங்கள பௌத்த மத தலைமை பீடங்களில் இருந்து மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் பணிகளுக்கு எதிராக எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ தற்போது கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கு எதிரான நிலைப்பாடுகளை தூண்டி ஆட்சியை கவிழ்க்க விசேட குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிங்கள பௌத்த மக்களின் மத்தியில் செல்வாக்கு மிக்க மதிக்கப்படும் புத்திஜீவிகள், தொழில் சார் நிபுணர்கள், மத பிக்குகள் ஆகியோரை இந்த குழுவில் உள்ளடக்கி அடுத்து வரும் நாட்களில் பெரும் எடுப்பில் பிரசாரங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
இதனால் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையான இன பிரச்சினைக்கும் ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணும் நோக்கில் தயாரிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் பிரசாரப்படுத்தப்பட்டு வரும் உத்தேச அரசியல் யாப்பு பணிகள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் உத்தேச அரசியல் யாப்பை தயாரித்து நடைமுறைப்படுத்தும் வரை மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு துணை நிற்போம் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட தீபாவளி வைபவத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் உரையாற்றிய போதே இரா.சம்பந்தன் இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
ஆனால் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிங்கள பௌத்த தலைமை பீடங்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி உத்தேச அரசியல் யாப்பை தயாரித்து நடைமுறைப்படுத்துமா என்பது சந்தேகமே.
ஏனெனில் ஏற்கனவே, உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் சிங்கள பௌத்த தலைமை பீடங்களை மீறி எதனையும் செய்யப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பகிரங்கமாக உத்தரவாதம் வழங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளார். சிங்கள பௌத்த மக்களின் மத தலைமை பீடங்களை மீறி ஸ்ரீலங்கா அரசாங்கம் எதனையும் செய்ய முற்படாது என்பது யதார்த்தம்.
ஏற்கனவே அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினை போன்ற விடயங்களால் மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளதுடன், கணிசமான ஆதரவையும் இழந்துள்ளது.
இந்த நிலையில், சிங்கள பௌத்த மக்களின் கடுமையான எதிர்ப்பை சம்பாதிக்கக்கூடிய உத்தேச அரசியல் யாப்பு தயாரிப்பு பணிகளை மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதும் சந்தேகமே.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வரலாற்றை நோக்கும் போது, எந்தவொரு ஆட்சியாளர்களும் இதுவரை சிங்கள பௌத்த மத தலைமை பீடங்களையோ, சிங்கள மக்களையோ எதிர்த்து எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்றியது இல்லை.
அது ஸ்ரீலங்காவின் எதிர்காலத்திற்கும், இருப்பிற்கும் இன்றியமையாததாக இருந்தாலும் ஸ்ரீலங்காவின் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள பௌத்த மத தலைமை பீடங்களையும், சிங்கள மக்களையும் எதிர்த்ததாக சரித்திரம் இல்லை. இதனால் கூடிய விரைவில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் பணிகள் கிடப்பில் போடப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம்…