நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசியின் அசாதாரண விலையேற்றம் காரணமாக நாட்டு மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அரிசியின் விலையை குறைக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோண் தெரிவித்துள்ளார்.
சதொச தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, வெள்ளை அரிசி கிலோ 65 ரூபாவிற்கும், நாட்டு அரிசி கிலோ 73 ரூபாவிற்கும், உடைந்த அரிசி கிலோ 60 ரூபாவிற்கும், சம்பா கிலோ 80 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சதொச கிளைகளினூடாக குறைந்த விலையில் அத்தியவசியப்பொருட்களை வழங்கும் திட்டத்திற்கமைய கடந்த வாரம் 500 பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏற்பட்ட வறட்சியால் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்த நிறுவனத் தலைவர், வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடன் 50 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்து தற்போது ஒரு இலட்சம் கிலோ அரிசி முதற் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சாதாரண விலையில் நாடு பூராகவும் அரிசி விநியோகம் மேற்கொள்ள முடியும் எனவும் சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோண் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.