புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த விசாரணையாளருக்கு சிறப்புப் பணப்பரிசில்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்கா இவற்றை நேற்று வழங்கி வைத்தார்.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த செப்டெம்பர் மாதம் 27ம் திகதி வெளியாகியது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஏழு பேருக்கும் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வித்தியா படுகொலை வழக்கில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் அப்போதய பணிப்பாளராகவிருந்த சுதத் நாக முல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஏ திசார மற்றும் பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் இளங்க சிங்க உள்ளிட்ட 33 பொலிஸ் அதிகாரிகளுக்கு 13லட்சத்து, 12ஆயிரத்து, 500ரூபாய் பணப்பரிசில் பகிர்ந்தளிக்கப்பட்டது.