யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய முயற்சித்த கணவனை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வியாழக்கிழமை மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட கணவன், அவரைப் படுகொலை செய்யும் நோக்குடன் கிணற்றுக்குள் தள்ளி விழுத்தியுள்ளார்.
சுமார் 15 அடி ஆழமான கிணற்றில் கிணற்றில் நீர் வற்றி இருந்தால் உயிராபத்து ஏற்படாத போதிலும், கிணற்றினுள் விழுந்தமையினால் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
அந்நேரம் மணைவியின் அபயக்குரல் கேட்டு, ஒன்று கூடிய அயலவர்கள் மனைவியை மீட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்கள்.
குறித்த தகவலின் பிரகாரம் கணவனை நேற்று ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சபேசன் முன்னிலையில் முற்படுத்த பொலிஸார் அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து பொலிஸார் தப்பியோடிய நபரை துரத்தி சென்று மீண்டும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.குறித்த நபர் மன்றில் தான் மனைவியை தாக்கவில்லை எனவும், மனைவி தானாகவே கிணற்றில் குதித்தாகவும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, பதில் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டிருக்கிறார் .