ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த நிலையில் அங்கு மேற்கு மொசூல் நகரப்பகுதியில், அல் ரிபாயி மாவட்டத்தில் மத்திய போலீஸ் சோதனை சாவடி மீது நேற்று முன்தினம் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆயுதங்களுடன் வந்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். எதிர்பாராத இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போலீசார் திணறினர்.
எனினும் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது. முடிவில், 5 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்தி விட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர்.
அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் சிக்கவில்லை.
இதேபோன்றதொரு தாக்குதல், மொசூல் பழைய நகரத்தில் அல் ஜாஞ்சிலி என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் 2 வாரங்களுக்கு முன் நடந்ததும், அதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.
2014-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த மொசூல் நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி அறிவித்தாலும், ஆங்காங்கே அவர்கள் பதுங்கி இருந்து தாக்குதல்கள் நடத்துவது குறிப்பிடத்தக்கது.