தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிங்களவர்களின் மனங்களை வெல்ல வேண்டும் என அமைச்சர் ராஜத சேனரட்ன தனியர் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் கொழும்பில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையின்போது அமைச்சர் ராஜித சேனரட்ன அவ்வாறு கூறியிருந்ததாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
அதிகாரப்பரவலாக்கம் சரியான முறையில் செய்யப்படவில்லை என்று அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் இடம்பெறும் செய்தியாளர் மாநாடுகளின்போது கூறுவதாக தெரிவித்த ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர், சிங்களத் தலைவர்கள் விட்ட தவறுகளை பட்டவர்த்தனமாக அமைச்சர் ராஜித சேனரட்ன நாடாளுமன்ற உரைகளின்போதும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் சிங்களவர்களின் மனங்களை வெல்ல வேண்டும் என அமைச்சர் ராஜித சேனரட்ன மாத்திரமல்ல, கடந்த காலங்களிலும் பல சிங்களத் தலைவர்கள் அவ்வாறு கூறியிருக்கின்றனர். அது மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்றும், கடந்த கலங்களில் சிங்கள தலைவர்கள் பலர் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு ஒப்புக்கொள்வது அல்லது மன்னிப்பு கேட்பது என்பது இலகுவானது. ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதுதான் இங்கு கேள்வியென அரசியல் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
சிங்களவர்களின் மனநிலையை வெல்வது அல்லது, அவர்களின் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது யாருடைய பணி? அந்த பணியை ஏன் தமிழ்தரப்பிடம் சிங்கள அரசியல்வாதிகள் விட்டுவிடுகின்றனர்? அமைச்சர் ராஜித சேனரட்ன ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
சமஸ்டி ஆட்சி முறை வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறான அதிகாரப்பரவலாக்கல் முறைக்கு சிங்கள மக்கள், தங்கள் மனநிலையில் மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் 1980களில் ராஜித சேனரட்ன கூறியிருந்தார்.
இந்த நிலையில், சிங்கள மக்களின் மன நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாற்றங்களை எற்படுத்த வேண்டும் என தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு அவ்வாறு கூறியதன் நோக்கம் தொடர்பாக விமர்சகர்கள் கேள்வி எழுப்பியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.
இனப்பிரச்சினை ஏன் உருவானது, எப்போது தோன்றியது, ஏன் யுத்தம் நடந்தது? எதற்காக முள்ளிவாய்க்கால் படு கொலைகள் நடந்தன என்பது பற்றி சிங்கள மக்களுக்கு எதுவுமே தெரியாதா? சரி 1958, 1983ஆம் ஆண்டுகளில் கொழும்பில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் எதற்கு நடந்தன என்பது பற்றியும் எதுவுமே சிங்கள மக்களுக்குப் புரியாதா?
சிங்கள மக்கள் ஏதோ செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போலவும், அவர்களுக்கு தமிழ் மக்கள் குணிந்து நின்று விளங்கப்படுத்த வேண்டும் என்பது போலவும் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியது நகைப்புக்கிடமானது என மூத்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதிகாரப்பரவலாக்கல் என்பது சிங்கள தமிழ் மக்களுக்கிடையேயான பிரச்சினையல்ல. அது நாடாளுமன்றத்திற்கும் மாகாணங்கும் இடையேயான விவகாரம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் கன்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.
ஆகவே 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் குறிப்பாக 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையின் பின்னர் முடிந்தவரை இனப்பிர்ச்சினை என ஒன்று இல்லையென்பதை காண்பிக்கும் அரசியல் நகர்வுகளையே காண முடிகின்றது என அந்தப் பத்திரிகையாளர் கூறியதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் அழிக்கப்பட்ட பின்னர் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வந்து விட்டது என்று மஹிந்த ராஜபக்ச நேரடியாகக் கூறியதை நல்லாட்சி அரசாங்கம் மெதுவாகக் கூறி தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய கருமங்கள், பொறுப்புக் கூறல்களில் இருந்து விலகிச் செல்வதாகவும் அந்த மூத்த பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளார் மேலும் தெரிவித்தார்.