வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை கையாளும் வகையில் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமென அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம் மெட்டிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர், சியோலில் இன்றைய தினம் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தென்கொரியாவின் பாதுகாப்புச் செயலாளர் சோங் யங் மூ கோவுடன், வடகொரிய விவகாரம் தொடர்பில் மெட்டிஸ் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திறன்களை வடகொரியா தொடர்ந்து பரிசோதித்து வருவதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவின் இவ்வாறான அச்சுறுத்தும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டின் மீது ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பது சிறந்தது என மெட்டிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.