கிளிநொச்சி, பூநகரியில் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததுடன், தனது மனைவியை வெட்டிக் காயங்காயங்களுக்கு உள்ளாக்கிய குடும்பஸ்தருக்கு, 8 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
கிளிநொச்சி, பூநகரியில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி, யோகராசா சிவகலா (வயது 42) என்ற குடும்பப் பெண்ணே, இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளின் கணவனான கணேச ஐயா காந்தரூபன் என்பவர், கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சிவகலா என்பவரை ஆட்கொலை செய்தமை, கர்ப்பிணிப் பெண்ணைக் காயங்களுக்கு உள்ளாக்கியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வந்தன. இந்நிலையில், தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது.
“இரண்டு குற்றச்சாட்டுகளிலும் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுகின்றார். அவரது முதலாவது குற்றமான ஆள்கொலைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரது இரண்டாவது குற்றமான ஆள் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமைக்கு ஓர் ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
“இரண்டு தண்டனைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். இரண்டு குற்றங்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று, மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.