இலங்கையில் பனை தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கான தடையை எதிர்வரும் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரத்தக்கதான அறிவித்தல் ஒன்றினை அரசாங்கம் விடுத்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தேச திருத்தச் சட்டத்தின்படி கித்துள் மரம் தவிர்ந்த பனை தென்னை மரங்களிலிருந்து இனிமேல் கள் இறக்குவது முற்றாகத் தடைசெய்யப்படுவதாக மதுவரித் திருத்தத்தில் இரண்டு அம்சங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
குறித்த மது வரியைத் திருத்துவதற்கான கட்டளைச் சட்டத்தின்படி இதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டு நிரந்தரச் சட்டமாக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் பதினைந்தாவது பிரிவிலுள்ள ஆ, மற்றும் இ, ஆகிய இரண்டு பந்திகளும் இல்லாமல் செய்யப்பட்டு அவற்றுக்குப் பதிலாக குறித்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆ) கித்துள் மரத்தைத் தவிர கள்ளை உற்பத்தின் செய்யும் எந்த மரத்திலும் கள்ளை இறக்குதலாகாது.
இ) கித்துள் மரத்தைத் தவிர வேறு ஏதேனும் மரத்திலிருந்து கள்ளு எடுக்கப்படுதல் அல்லது கீழிறக்கப்படுதல் ஆகாது.
போன்ற இரு அம்சங்கள் திருத்தியமைக்கப்பட்டதான வர்த்தமானி அறிவித்தலினை அரசு அறிவித்துள்ளது. இதன்படி குறித்த சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதலளிக்குமாயின் அது எதிர்வரும் 2018ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவேண்டுமென்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே கித்துள் தவிர்ந்த பனை தென்னை மரங்களில் கள் இறக்கும் தொழில் நடைபெறுவதால் ஏராளமான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் வட மாகாணத்தில் சுமார் 12000 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்பினை எதிர்கொள்ளவேண்டிவரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.