யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக மன உளச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்ட குடும்ப பெண் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெற்றன.
அரியாலையில் உள்ள அவர்களது வீட்டில் இன்று காலை இறுதி சடங்கு இடம்பெற்றதுடன் செம்மணி சுடலையில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நபரொருவருக்கு நம்பிக்கை அடிப்படையில் 1 கோடியே 17 இலட்சம் ரூபா நிதியை வழங்கியதாகவும் எனினும் அதனைப் பெற்ற நண்பர் மீள செலுத்த மறுத்த நிலையில், கடன் வழங்கிய குடும்பத் தலைவரான கிரிஷாந் என்பவர் கடந்த செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் கணவனை இழந்த பின்னர் மன உளைச்சலுக்கு ஆளாகிய குடும்பத் தலைவியான 28 வயதான சுநேத்ரா என்ற பெண், தனது 3 பிள்ளைகளுடன் கடந்த நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டனர்.
தற்கொலை செய்த பெண்ணின் கணவன் கடன் தொல்லையால் உயிரிழந்துள்ள நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாகிய நிலையிலேயே இப்பெண் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை தற்கொலை செய்த குறித்த பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் தமது இறப்புக்கு காரணமானவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
தமது சடலங்களை தமது கணவரின் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.