இசைக்குயில் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார்.
1952-ல் பாட தொடங்கிய எஸ்.ஜானகியின் இசைப் பயணம் மிக நெடியது. மிகவும் இனிமையான எஸ்.ஜானகியின் குரல் ஒலிக்க தொடங்கிவிட்டால் இன்னிசை பாடும் குயில் கூட தனது கானத்தை சற்று நிறுத்திவிட்டு அவரது பாடலை ரசிக்கும் என்று ரசிகர்களால் புகழப்படுபவர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஜானகி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டார். மேலும் மேடை கச்சேரிகளையும் வெகுவாக குறைத்துக் கொண்டார். பிறகு இவற்றை விட்டு முழுமையாக விலகவும் தொடங்கினார். 80 வயதை கடந்த எஸ்.ஜானகி தனது முதுமை காரணமாகவும் இளையவர்களுக்கு வழி விடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது.
இதனால் சிலர் அவரை சந்தித்து வற்புறுத்தியதன் காரணமாக அதை தவிர்க்க முடியாமல் மீண்டும் சில சினிமா படங்களில் பாடல்கள் பாடினார். சில கச்சேரிகளிலும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தார்.
எஸ்.ஜானகிக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரை ‘பூங்குயில்’ என்று ரசிகர்கள் போற்றி பாராட்டுகிறார்கள். கேரளாவில் எப்போதும் அவரது கச்சேரி நடந்தாலும் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.
எஸ்.ஜானகியும் கேரளாவில் ஏராளமான கச்சேரிகள் நடத்தி உள்ளார். இந்த நிலையில் மைசூரில் வசித்து வரும் கேரள தொழில் அதிபரும் எஸ்.ஜானகியின் ரசிகருமான மனுமேனன் எஸ்.ஜானகியின் கச்சேரியை மைசூரில் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக அவரும் மேலும் சிலரும் அவரை நேரில் சந்தித்து பெரும் முயற்சி எடுத்து கச்சேரிக்கு சம்மதம் பெற்றார்.
இதைதொடர்ந்து நேற்று மைசூருமான கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில் எஸ்.ஜானகியின் இசைக்கச்சேரி நடந்தது. கணபதி பாடலுடன் பாட தொடங்கிய அந்த இசைக் குயில் சுமார் 4 மணிநேரம் இன்னிசை மழை பொழிந்தது. இதை ரசிகர்கள் மெய் மறந்து ரசித்தனர். பல பாடல்களை பாடும்போதும் அவர் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டார். அதை பார்த்த ரசிகர்களும் உருகிப்போனார்கள்.
மைசூரு ராஜ குடும்பத்தினர், கன்னட திரையுலக நடிகர், நடிகைகள் என்று பலரும் இதில் பங்கேற்றனர். அவருக்கு நினைவு பரிசு, பொன்னாடை என்று மரியாதைகள் செய்யப்பட்டன. இவற்றை ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க ஏற்றுக்கொண்ட எஸ்.ஜானகி இதுதான் தனது கடைசி இன்னிசை நிகழ்ச்சி என்றும் இனி சினிமாவிலும் பாடப் போவது இல்லை என்று கூறியபோது அரங்கமே அமைதியில் உறைந்தது.
எஸ்.ஜானகி தொடர்ந்து பாட வேண்டும் என்பதே அந்த அமைதியின் உள் அர்த்தமாக இருந்தது.