அமெரிக்காவுக்கான சீன தூதராக 65 வயது குய் டியான்காய் பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு முன்வந்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் அவருடைய ராஜினாமாவை அதிபர் ஜின்பிங் ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சீன அரசு வட்டாரங்கள் கூறுகையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் (நவம்பர்) சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அமெரிக்காவுக்கான சீன தூதரை புதிதாக நியமித்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பராமரிப்பதில் சுணக்கம் ஏற்படலாம். எனவே குய் டியான்காய் இன்னும் சில மாதங்கள் வரை அமெரிக்காவுக்கான தூதராக பதவி வகிப்பார். அதுவரை அவர் ஓய்வு பெறுவது தள்ளிவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தன.
அண்மையில் சீன அதிபராக மீண்டும் ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் நிர்வாக ரீதியாக பல மாறுதல் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் குய் டியான்காவின் ஓய்வு தள்ளிப்போவது, குறிப்பிடத்தக்கது.