சவூதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பொகவந்தலாவையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பொகவந்தலாவையைச் சேர்ந்த ராமகிருஸ்ணன் ராமஜெயம் ஜெயகுமார் ஆவர். இவர் தனது பிறந்த தினத்திலேயே மரணத்தை தழுவியுள்ளார்.
குடும்பகஷ்டத்தினாலும் பொருளாதார சுமையினாலும் கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பிவுள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தின் ஊடாக தொழில்நிமிர்த்தம் சவூதிக்கு சென்றிருந்தார்.
பொகவந்தலாவை லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவைச் சேர்ந்த 37வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான ராமகிருஸ்ணன் ராமஜெயம் ஜெயகுமார் வெளிநாட்டுக்கு இரண்டு வருடகால நிபந்தனையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்றிருந்தார்.
இந்நிலையில் அங்கு சென்று இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்துள்ள நிலையில் ராமகிருஸ்ணன் ராமஜெயம் ஜெயகுமார், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவிருந்த நிலையில், அவருடைய பிறந்த தினமான 30.10.2017 நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் இதன்போதுஇ ஜெயகுமார் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
ராமகிருஸ்ணன் ராமஜெயம் ஜெயகுமார் சவூதி அரேபியாவில் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை, கார்வண்டியொன்று மோதியதில் ஸ்தலத்திலேயே உயிர் இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு வழங்கபட்டுள்ள தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வாகன விபத்தில் உயிரிழந்த ராமகிருஸ்ணன் ஜெயகுமாருடை சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.