பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். நாம் தினமும் வழிபடும் பல கடவுளர்களின் கைகளில் ஓம்காரத்தை வெளிப்படுத்தும் சங்கு இருப்பதை நாம் காணலாம்.
பாற்கடலில் தோன்றியது :
தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
சங்கின் வகைகள் :
வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ (விகனஸ) ஆகமத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய சங்குகள் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. திருமலை வேங்கடவன் கைகளில் மணி சங்கும், ரங்கநாத சுவாமியின் கைகளில் துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமியின் கைகளில் பாருத சங்கும், பார்த்த சாரதி பெருமாளின் கைகளில் வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாரது கைகளில் பார் சங்கும், சவுரி ராஜ பெருமாள் கையில் துயிலா சங்கும், கலிய பெருமாளின் கரங்களில் வெண் சங்கும், ஸ்ரீநாராயண மூர்த்தியிடம் பூமா சங்கும் இருப்பதாக வைகானஸ ஆகமம் குறிப்பிடுகிறது.
வாஸ்து பரிகாரம் :
பொதுவாக வீடுகளில் அமைந்திருக்கும் வாஸ்து குறைகளை நீக்குவதற்கு, மஞ்சள் கலந்த நீரில் துளசியை இட்டு சங்கு தீர்த்தமாக காலை நேரங்களில் தெளித்து விட்டால் அந்த குறைகள் நீங்குவதாக ஐதீகம். பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம். அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள். அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமைவதாக அவர்கள் நம்பினார்கள்.
கோவில் மணி :
பெரும்பாலான கோவில்களில் மணி அடிப்பது மற்றும் சங்கு ஊதுவது போன்ற நடைமுறைகள் இருப்பதை கவனித்திருப்போம். சங்கு ஊதுவது என்பது தற்போதைய சூழலில், அபசகுனம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. வேதங்களின் உட்பொருளான ஓம்கார மந்திரத்தை நினைவுபடுத்துவதாகவும், ‘அர்த்தம்’ எனப்படும் பொருள் வளத்தை தருவதாலும் கடவுளுக்கு முன்பு வைத்து வணங்கப் படும் தன்மையை சங்கு பெற்றிருக்கிறது. மேலும், மங்களகரமான பூஜை வேளைகளில் தேவையற்ற பேச்சுகள் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தை குறைத்து விடாதிருக்க சங்கநாதம் உதவி செய்கிறது. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கு ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. மகாகவி பாரதியும் ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே..’ என்று வெற்றியை பறை சாற்றும் பொருளான சங்கு பற்றி பாடுகிறார்.
கிருமிகளைக் கொல்லும் :
சங்கிற்கு உடலை பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால்தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாக கருதப்பட்டது. குழந்தைகளுக்கு அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றி தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது. சங்கநாதம் கேட்கும் இடங் களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும் பெண்கள் வளையல்கள் அணிவதை பார்த்திருப்போம். ‘வளை’ என்பது சங்கு என பொருள்படும். ஆரம்ப காலங்களில் சங்கின் மூலமாகத்தான் இது தயாரிக்கப்பட்டது. பின்னர் கண்ணாடி, தங்கம், வெள்ளி என உபயோக முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. சங்கு ஆபரணமாக பயன்படுத்தப்பட்டதோடு, ஆயுர்வேத வைத்தியத்தில் பஸ்பமாகவும் பயன்படுகிறது.
அட்சய திருதியை :
மக்களிடையே பிரபலமாக இருக்கும் அட்சய திருதியை நாளன்று, வலம்புரி சங்குடன் தங்கம் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் ஐஸ்வர்ய வளம் நாளும் வளரும் என்பது வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். வலம்புரி சங்கை வெறுமனே ஒரு தட்டில் வைக்கக்கூடாது என்பதால், அதற்கு பொருத்தமான அளவில் வெள்ளிக் கவசம் செய்து பொருத்திய பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்து, அதற்கான ‘ஸ்டாண்டில்’ வைப்பது அவசியம். அதற்கு தினமும் பசும்பால் அபிஷேகம் செய்து, பூஜை செய்து வந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கியிருப்பாள் என்பது உறுதி.