எந்தவித ஆவணங்களுமின்றி மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய யாழ். ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஆலயப் பூசகரை நீதவான் கடுமையாக எச்சரித்துள்ளதுடன், 18 ஆயிரம் ரூபா அபராதமும், ஒரு மாதம் சிறைத்தணடனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.ரியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆலயப் பூசகர் மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது எந்தவித ஆவணங்களுமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த பூசகர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சமூகத்தில் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டிய மதகுருமார்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தலாமா? என ஆலயப் பூசகரிடம் கேள்வியெழுப்பிய நீதவான் கடுமையாக எச்சரிக்கையும் செய்து, தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.