உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று மனிதச் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் சு.டோன்பொஸ்கோ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அடைவதற்குப் போராடியவர்களைப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என மீண்டும் மீண்டும் அரசாங்கம் வலியுறுத்திக் கொண்டே செல்கின்றது.
அக்கோரிக்கையை முன்வைத்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட போதிலும், புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அநீதியானதாகும்.
ஏற்கெனவே, பல தடவைகள் ஆயுதம் தாங்கிப் போராடியவர்களை அரசாங்கம் விடுதலை செய்து தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளது.
கடந்த கால மஹிந்தவின் ஆட்சிக் காலம் போல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறிப் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதைத் தொடர்ந்து மறுத்து வருகின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகள், அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமை நீதித்துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகும்.
மேலும், நாட்டின் பாதுகாப்புப் பற்றி சட்டமா அதிபர் ஏன் சந்தேகம் கொள்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் அல்லது அவர் நீதிபதிகள் சரியான தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் எனச் சந்தேகம் கொண்டுள்ளாரா எனத் தெரியப்படுத்த வேண்டும்.
எனவே, மீண்டும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரணையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.