சென்னை கொடுங்கையூரில் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி 2 சிறுமிகள் பலியானது குறித்து நடிகர் விஷால் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் நிகழும் உயிர் பலிகளை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அப்பாவி மக்கள் மழை வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி பலியாகிறார்கள். விவசாயிகள் இறக்கிறார்கள். இதுபோன்ற நிலைமைகளை நாம் எத்தனை காலம்தான் எதிர்கொள்வது? தவறுகளை திருத்தி மீண்டும் அவை நடக்காமல் தடுக்க வேண்டாமா? நமது நகரம் இன்னும் சீரடையவில்லை. மழைக்காலங்களில் நிகழும் மரணங்கள் சோகமானது.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. போர்க்கால அடிப்படையில் இந்த பிரச்சினைகளை அணுகவில்லை. பெருமழை, புயல், வெள்ளத்தை எதிர்கொள்ளும் நிலையில் சென்னையை நாம் வைத்திருக்கவில்லை. இவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வைப்பதற்காக இன்னும் எத்தனை உயிர்களைத்தான் நாம் தியாகம் செய்யவேண்டும்? நடந்தது தவறு அல்ல, குற்ற செயல்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.