அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த 31-ம் தேதி உஸ்பெகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி சாய்புல்லோ சைபோவ் நடத்திய டிராக்டர் தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நியூயார்க்கில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இதுதொடர்பாக ஐ.எஸ். ஆதரவு செய்தி பத்திரிகை கூறுகையில், எங்கள் அமைப்பின் வீரர்களில் ஒருவர் நியூயார்க் நகர வீதியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், அமெரிக்காவில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஐ.எஸ். மிக பெரிய விலையை கொடுக்க நேரிடும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவின் மக்களை கொன்றும், காயப்படுத்தி தீங்கு விளைவிக்கும் விலங்கை, ஐ.எஸ். இயக்கம் தன்னுடைய வீரர் என கூறியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே கடந்த இரு தினங்களாக ராணுவம் அவர்களுக்கு மரண அடியை கொடுத்து வருகிறது, அமெரிக்கா மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் மிக பெரிய விலையை கொடுக்க நேரிடும் என பதிவிட்டுள்ளார்.