நாட்டின் இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமானால் 1949 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் அரசியல்த் தலைவர்கள் வலியுறுத்தி வரும் சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாப்பினாலேயே முடியும் என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களினால் எழுத்துமூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வட மாகாண முதலமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் போது அதிகாரம் பகிரப்படக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள வட மாகாண முதலமைச்சர், நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு முழுவதுக்குமான அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டமையே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையினர் தாம் ஏதோ வழியில் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதிகாரங்களை மற்றைய இனங்களுடன், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள மறுப்பதற்காகவே, 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்டம் முதல் அனைத்து சட்டங்களும் அரசியல் தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடையத்தில் அனைத்து சிங்களப் பெரும்பான்மையினக் கட்சிகளின் சிங்களத் தலைவர்களும் கட்சி பேதமின்றி சிங்களப் பெரும்பான்மையினர் பெற்றுக் கொண்ட அதிகாரம் வேறெவருடனும் பகிர்ந்து கொள்ளப்படாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவிக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக் கொடுக்க முன்வந்தவர்கள் விடுதலைப் புலிகள் அழிந்ததும் பழைய நிலைக்கே மாறிவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே மஹிந்த ராஜபக்சவும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர், அதிகாரப் பகிர்வு பற்றி எந்த வித மனமாற்றமும் சிங்களத் தலைவர்களிடையே இதுவரை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வையே வலியுறுத்திவரும் மஹிந்த ராஜபக்ச, 13வது திருத்தச்சட்டத்தை ஒட்டிய மீளாய்வு செய்யப்பட்ட அதிகாரப் பகிர்வை எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் கூறுகின்றார்.
போர் முடிந்ததும் 13 ++ என்று கூறியிருந்த மஹிந்த தற்பொழுது அதிகாரப்பகிர்வு வேண்டாம் என்று கூறுவதாகவும் குறிப்பிடும் முதலமைச்சர், இந்தவாரம் இந்தியாவிற்கு சென்றிருந்த போது ஸ்ரீலங்காவில் பௌத்தம் முதலிடம் பெறாவிட்டால் பௌத்தம் அழிந்துவிடும் என்று கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கூற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ச பௌத்தம் பற்றியன்றி, சிங்கள ஆதிக்கம் பற்றியே கூறியுள்ளார் என்பதை நாம் உணர வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் சிங்களவரே. ஆகவே பௌத்தத்திற்கு முதலிடம் கோருபவர்கள் சிங்களவருக்கே முதலிடம் கோருகின்றார்கள் என்றும் அவர் கோடிகாட்டுகின்றார்.
பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்பதே மஹிந்த உட்பட சிங்கள பெரும்பான்யினத் தலைவர்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
இதனால், இந்து – கிறீஸ்தவத் தமிழரும், முஸ்லீம்களும் எக்காலத்திலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள வட மாகாண முதலமைச்சர் அதனை மீறி ஏற்றால் நாம் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆகி விடுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.
பெரும்பான்மையினர் அரசாளும் போது பெரும்பான்மையினர் மதத்திற்கு முன்னுரிமை கேட்பது மதத்திற்குப் பங்கம் வரும் என்பதற்காக அல்ல என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இதன் ஊடாக. மதத்தைக் காரணம் காட்டி சிறுபான்மையினரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்க உதவாது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவ்வாறான நிலமை ஏற்படுமானால், மீண்டும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தின் கீழ் நாம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுய கௌரவத்துடன் வாழத்துடிக்கும் எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தின் ஆதிக்கக் கெடுபிடிகளுக்கு அடிமைப்பட்டு வாழ அனுமதி தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறும் வட மாகாண முதலமைச்சர், ஒரே விதமான மக்கள் கூட்டங்கள் இடையேதான் ஜனநாயகம் பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றது என்றும் கூறியுள்ளார்.
பல்லின, பல்மத, பன் மொழி மக்களைப் பொறுத்த வரையில் யாவரும் சம உரித்துக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் யாவரதும் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஊன்றியாராய்ந்து அவற்றிற்கான ஆக்கபூர்வமான தீர்வுகளைப் பெற்றுத்தர பெரும்பான்மையினப் பெருங்கட்சிகள் ஒருபோதும் தயாரில்லை என்பது வரலாற்று ரீதியாக உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓரளவு ஏற்புடையதான ஒரு தீர்வை சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த போது அதனை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் எரித்துப் போட்ட பின்னணியில், இனி அவ்வாறான ஒரு தீர்வைக் கொண்டுவரமாட்டார்கள் என்பதே யதார்த்தம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பயந்து கடந்த காலங்களில் தீர்வுத் திட்டங்களை முன்வைத்த பெரும்பான்மையினர், அவர்கள் இல்லை என்ற நிலையில், இனி முற்றுமுழுதான சிங்கள ஆதிக்கத்தின் கீழ் ஒரு சில சலுகைகளை ஒற்றையாட்சியின் கீழேயே தர முன்வருவார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.
சிங்கள பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டையே மஹிந்த ராஜபக்சமார் வெளிப்படுத்தி வருவதுடன் அதன் ஊடாக தமது அரசியலுக்கும் இன ரீதியான சிந்தனைக்கும் வலுவூட்டி வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மஹிந்த மற்றும் அவரது தரப்பினருடன் முரண்பட்டு பாராளுமன்றத்திற்கு இந்த அரசாங்கம் அரையும் குறையுமான ஏதோ ஒரு வகையான ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினை முன்வைத்தாலும் அதனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை என்றும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசியல் தலைவர்களின் ஆதிக்கம் தமிழ் மக்களை விட்டு நீங்க வேண்டுமானால், எம்மிடம் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பான்மையினத் தலைவர்கள் ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட அதிகாரங்கள் மீண்டும் எம்முடன் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு உண்மையான அதிகாரப் பகிர்வொன்றே தீர்வாகும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவ்வாறான தீர்வுசமஷ்டி அரசியல் யாப்பு ஒன்றின் கீழேயே கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.