மக்களின் கருத்துக்களையும் பிரச்சினைகளையும் தெரிவிப்பதற்காக ‘மையம் விசில்’ ‘MAIAMWHISTLE’ என்ற பிரத்தியேக செயலியை தனது பிறந்த நாளான இன்று (07) நடிகர் கமல் ஹாசன் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கமல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் தமிழகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், தீயவை நடக்கும்போது குரல் கொடுக்க ‘மையம் விசில்’ செயலி பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் தங்களது பிரச்சினைகள் பற்றி பேச #theditheerpomvaa, #maiamwhistle, #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
செயலியின் சோதனை தற்போது நடந்து வருவதாகவும், ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பொறுமையாக இருப்பதாகவும் அறிஞர்கள் பலருடன் ஆய்வு செய்து தயார்படுத்திக் கொண்டிருப்பதாவும் கமல் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயரை அறிவிப்பதில் தாமதம் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், இதுபற்றி கமல் பின்வருமாறு கூறியுள்ளார்,
”கர்ப்பமாக இருப்பதாகக் கூறியவுடன் குழந்தையின் பெயரைக் கேட்காதீர்கள். குழந்தை ஆணா, பெண்ணா என்பதைப் பார்த்து பெயர் வைத்துக்கொள்ளலாம். ”நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது” என கமல் குறிப்பிட்டுள்ளார்.