யாழ். பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட மூன்று பீடங்களும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீளவும் இயங்க ஆரம்பிக்கும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மாதம் 19ஆம் திகதி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்தப் போராட்டம் கடந்த 30ஆம் திகதி நிர்வாக முடக்கப்போராட்டம் வரை விரிவுபட்டது. இதனையடுத்து 31ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவ பீடம்என்பன மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இருப்பினும் மாணவர்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் தலைமையில் நிர்வாகக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிர்வாக முடக்கத்தைக் கைவிடுவதான மாணவர்களின் அறிவிப்பு இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.இதனடிப்படையில் எதிர்வரும் 13ஆம் திகதி மூடப்பட்ட மூன்று பீடங்களையும் மீள ஆரம்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.