82-வது சீனியர் தேசிய பேட்மிண்டன் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த் – லக்ஷியா சென்
ஆகியோர் மோதினர். இப்போட்டியில், ஸ்ரீகாந்த் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் 11-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனோய், சுபாங்கர் தே-ஐ எதிர்கொண்டார். இந்த போட்டியில் பிரனோய் 21-14, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, ருத்விகா ஷிவானியை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், சிந்து 17-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதே பிரிவின் மற்றொரு அரையிறுதி போட்டியில் சாய்னா நெஹ்வால், அனுரா பிரபுதேசாயை எதிர்கொண்டார். இப்போட்டியில், சாய்னா 21-11, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று (8-ம் தேதி) நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் – எச்.எஸ்.பிரனோயையும், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து – சாய்னா நெஹ்வாலையும் எதிர்கொள்ள உள்ளனர்.