வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடமாகாண ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, கடமையிலிருக்கும் போது, அவுஸ்திரேலியாவுக்கு மேல்கல்வி கற்க செல்வதற்கான அனுமதிகேட்டு மாகாண ஆளுநருக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக விண்ணப்பம் செய்திருந்தார்.
அவரது விண்ணப்பம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் அனுமதி கிடைக்க முன்னரே மரியதாசன் ஜேகூ அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.இந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய அவர் மீள அழைக்கப்பட்டு, அனுமதியின்றி வெளிநாடு சென்ற காரணத்தால் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், தனது வெளிநாடு செல்லும் விடுமுறைக்கான விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க கட்டளையிடுமாறும் கோரி உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ யாழ். மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி ஆளுநருக்கு இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். எனினும் அவர் ஆற்றுகின்ற பணிகள் மாகாண அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றுக்கு உள்ளது.
அதனடிப்படையில் மனுதாரர் வெளிநாட்டில் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க மன்று கட்டளையிடுகின்றது.இந்தக் கட்டளையின் பிரதி அவுஸ்திரேலிய தூதரகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார் .