இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் டோனி. இரண்டு உலக கோப்பையை வென்று (20 ஓவர் 2007, ஒருநாள் போட்டி 2011) இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தார்.
டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். தற்போது ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் மட்டும் ஆடி வருகிறார்.
நியூசிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோற்றபோது டோனி விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த ஆட்டத்தில் அவர் 37 பந்தில் 49 ரன் எடுத்தார். கோலிக்கு அடுத்தப்படி அவர்தன் அந்த ஆட்டத்தில் அதிக ரன்களை எடுத்தார்.
20 ஓவர் போட்டியில் டோனியால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் இளம் வீரர்களுக்கு அவர் வழிவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஷேவாக் கூறும்போது, இளம் வீரர்களுக்கு டோனி ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை என்றும், அதே நேரத்தில் தான் சந்தித்த முதல் பந்தில் இருந்தே டோனி அதிரடியாக ஆட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் டோனி மீதான விமர்சனம் நியாயமற்றது என்று அவருக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
டோனியை விமர்சனம் செய்வது ஏன்? என்று எனக்கு முதலில் தெரியவில்லை. இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. நான் 3 முறை சரியாக ஆடா விட்டால் என்னை யாரும் விமர்சிப்பது இல்லை. ஏனென்றால் எனக்கு 35 வயதுக்கு மேல் ஆகவில்லை.
டோனி 36 வயதிலும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அனைத்து வகையான உடல் தகுதியிலும் தேர்வாகி உள்ளார். அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு முறையும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. ஆடுகளத்தில் அவரது ஆலோசனை பயனாகிறது. இலங்கை, ஆஸ்திரேலியா தொடரை பார்த்தால் தெரியும். இந்த தொடரில் டோனியின் பேட்டிங் நன்றாக இருந்தது.
டோனி எந்த வரிசையில் ஆடுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஹர்த்திக் பாண்டியா ராஜ்கோட் போட்டியில் வந்தவுடன் வெளியேறினார். அப்படி இருக்கும்போது ஒரே ஒரு மனிதரை மட்டும் விமர்சிப்பது ஏன்? அவர் களம் வரும்போதே ரன்ரேட் 8.5 அல்லது 9 ஆக இருந்தது.
இதனால் டோனியை மட்டும் விமர்சனம் செய்வதில் எந்த நியாயமும் இல்லை. அவர் மீதான விமர்சனம் தேவையற்றது.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
டோனிக்கு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.