தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய தலைமைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன இணைந்து 2002 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு 15 ஆசனங்களைக் கைப்பற்றியது.
பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கூட்டணி வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான ஒரு பிரிவாகவும் ஆர்.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் மற்றுமொரு பிரிவாகவும் பிரிந்தது.
இதன் காரணமாக தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தை அடுத்த தேர்தல்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தந்தை செல்வா மற்றும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரின் பின்னர் செயலிழந்து காணப்பட்ட இலங்கை தமிழசுக் கட்சியினை மீள தூசி தட்டினர்.
இதனையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வந்த தேர்தல்களில் தமிழசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டது.
இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் மற்றும் அதனை அண்மித்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கால பங்காளி கட்சியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், கூட்டமைப்பில் இருந்து விலகியது.
அரசாங்கத்தின் துணை ஆயுதக்குழுவாக செயற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டமையின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் புளொட் அமைப்பு கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
எனினும், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன ஏற்கனவே விலகியுள்ள நிலையில், சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்துள்ளது.
எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன் நின்று செயற்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டு பின்னர் வந்து இணைந்து கொண்ட இலங்கை தமிழசுக்கட்சி கூட்டமைப்பிற்கு உரிமை கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.