தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள கவ்கா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கொர்னிடோ நகரில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலச்சரிவில் 18க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சுற்றி வசித்துவந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் ஜுவான் மனுவல் சாண்டாஸ், இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவருக்கும் அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் புட்டுமயோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கி உயிரிழந்தனர்.