இந்தி திரையுலகில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். ராணுவத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்த அவரது தந்தை அசோக் சோப்ராவின் பணிநிமித்தம், பிரியங்காவின் குடும்பம் டெல்லி, சண்டிகார், புனே உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்தது.
கடந்த 2000-ம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா ‘உலக அழகி’ பட்டம் வென்றபோது, அவர்களது குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்தது. இதனால், பரேலியின் 56-வது வார்டில் அவர்களுக்கு வாக்குரிமை இருந்தது. பின்னர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருடன் மும்பையில் குடியேறினார். இதனால் தேர்தல் நேரங்களில் அவர்கள் பரேலிக்கு சென்று வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி, உள்ளூர் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஆர்.விக்ரம் சிங், பரேலி வாக்காளர் பட்டியலில் இருந்து, பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது தாயார் மது சோப்ராவின் பெயர்களை நீக்குமாறு உத்தரவிட்டார். அசோக் சோப்ரா கடந்த 2013-ம் ஆண்டிலேயே மரணம் அடைந்துவிட்டார்.