இத்தாலியில் உள்ள வத்திகான் நகரில் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் பிறப்பித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத்தலமாகத் திகழும் வத்திக்கான் நகரம் போப் ஆண்டவரின் ஆளுமையின் கீழ் உள்ளது. அங்கு தினமும் இலட்சக் கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். புனித நகரமான வத்திக்கானில் மக்களின் உடல் நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதால், சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
சிகரெட் பிடிப்பதால் ஆண்டுக்கு 70 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையில் வத்திக்கானில் 150 கோடி ரூபா மதிப்பிலான சிகரெட் விற்பனை நடைபெறுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதைக் கருத்திற் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.