மக்களிடையே பரவலாகத் தாக்கத்தை ஏற்படுத்திய, அதிகளவு பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல், ஆண்டின் சிறந்த ஆங்கிலச் சொல்லாக காலின்ஸ் அகராதி மூலம் தேர்வு செய்யப்படும்.
ஆண்டின் சிறந்த சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதியும் தேர்ந்தெடுப்பதுண்டு. கடந்த ஆண்டின் சொல்லாக ‘போஸ்ட் த்ரூத்’ (post truth) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்தது.
சொல் தேர்வுக்கு ஆக்ஸ்போர்டு அகராதி சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. தேர்ந்தெடுக்கும் சொல் கடந்த ஆண்டின் ஆன்மாவை, போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும்; ஆக்ஸ்போர்ட் அகராதியில் ஏற்கெனவே அந்தச் சொல் இடம்பெற்றிருக்கிறதா, இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள்.
அதே நேரத்தில் ‘இந்த ஆண்டின் சொல்’லாகத் தேர்ந்தெடுக்கப்படும் சொல், புதிய சொல்லாக இருந்தால் அது எதிர்காலத்தில் அகராதியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான உத்தரவாதமும் இல்லை.
தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு நிலைபெற்றால் மட்டுமே அந்தச் சொல் அகராதியில் இடம்பெறும். நபர்கள், இடங்கள், நிகழ்வுகளின் பெயர்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவதில்லை.
காலின்ஸ் அகராதியும் இதே விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. கடந்த ஆண்டின் சொல்லாக ‘Brexit’ தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் சொல்லாக ‘ஃபேக் நியூஸ்’ (Fake News) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் மட்டும் இச்சொல்லைப் பயன்படுத்துவது 365 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது இந்தச் சொல் அதிகளவு பயன்படுத்தப்பட்டது. அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகளில் இடம்பெறும் முக்கிய சொல்லாகவும் இது உள்ளது.
ஃபேக் நியூஸ் என்பதை ‘செய்தி சொல்வது போன்ற பாவனையில் பொய்யான, உணர்ச்சியூட்டும் தகவல்களை அளிப்பது’ என்று காலின்ஸ் அகராதி வரையறை செய்கிறது. அடுத்த ஆண்டு காலின்ஸ் அகராதியில் ‘ஃபேக் நியூஸ்’ என்ற சொல்லும் அதற்கான விளக்கமும் இடம்பெறும்.
இன்றைய அவசர யுகத்தில் கிடைக்கும் செய்தி உண்மையானதுதானா என்பதை மறுஆய்வு செய்யாமல் பிரசுரிப்பதே பொய் செய்திகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
பிரதான ஊடகங்கள் தொடங்கி, வாட்ஸ்அப்பில் ஃபார்வர்ட் மெசேஜ் அனுப்புபவர்கள் வரை இந்தப் பொய்ச் செய்தியின் தாக்கத்தில் தப்பிக்காதவர்கள் எவரும் இல்லை.