வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்டோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு பூராகவும் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து நேற்று அதிகாலை வரை பொலிஸார் பல சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் சமூகவிரோத செயல்கள்,போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சுற்றிவளைப்பின் ஊடக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 2 ஆயிரம் பொலிஸார் பயன்படுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாணம் முழுவதுமாக 3 ஆயிரத்து 500க்கு மேற்பட்டவர்களிடம் சோதனைகள் மற்றும் விசரானைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இந்த சோதனை நடவடிக்கையில் 70க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட போதையில் வாகனம் செலுத்தியோர் என சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பில் போக்குவரத்துப் பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வாகனங்களை சோதனையிட்ட போது சிறு குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 220 பேருக்கு தண்டம் அறவிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.