ஏமன் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் சவுதி இளவரசர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை இஸ்ரேல் நாளேடு மறுத்துள்ளதுடன், அது திட்டமிட்ட படுகொலை என தகவல் வெளியிட்டுள்ளது.
ஏமன் எல்லையில் உயரதிகாரிகள் 7 பேருடன் சவுதி இளவரசர் பின் முக்ரின் சென்றுகொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணமான அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் நாளேடு ஒன்று வெளியிட்ட தகவலில், இளவரசர் முக்ரின் சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கவில்லை என்றும், சவுதி போர் விமானத்தில் இருந்து குறித்த ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது திட்டமிட்ட படுகொலை என்றும், அதில் வெற்றிபெற்றுள்ளதாகவும் இஸ்ரேல் நாளேடு தெரிவித்துள்ளது.இருப்பினும் குறித்த தகவலின் உறுதித்தன்மை குறித்து அந்த நாளேடு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்ற போதும்,தற்போதைய சூழலில் இளவரசர் சல்மானின் கை ஓங்கியிருப்பதால், எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் வகையில் இந்தப் படுகொலையும் நடந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
முன்னதாக இளவரசர் முக்ரின் சவுதி அரச பரம்பரையில் உள்ள சுமார் ஆயிரம் இளவரசர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி,சல்மானை பட்டத்து இளவரசர் பொறுப்புக்கு வர ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல் ஒன்று வெளியானது.
தற்போது இந்த தாக்குதல் மூலம் தமது எதிர்ப்பாளர்களுக்கு இளவரசர் சல்மான் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக இஸ்ரேல் நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் 11 இளவரசர்கள் மற்றும் அமைச்சர்களை பின் சல்மானின் உத்தரவுப்படி கைது செய்துள்ள நிலையில், சுமார் 100 அமைச்சர்கள் மற்றும் இளவரசர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.