தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் புதிய கூட்டணி தேர்தலில் களமிறங்கும், இந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் பொது அமைப்புக்களும் தேர்தலில் போட்டியிடும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய இனங்களை உதாசீனம் செய்கின்ற வகையிலும், தேசிய இனங்களின் உரிமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் வழிகாட்டல் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது.
தமிழ் மக்களினால் ஆதரவு வழங்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில், அவற்றினை சீர் செய்ய தமிழ் மக்கள் பேரவைக்கு பொறுப்பு இருக்கின்றது.
அரசியலமைப்பு நிராகரிக்க வேண்டிய விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று உள்ளூராட்சி தேர்தலை கருத்துக்கணிப்பாக ஏற்று அவற்றினை விளங்கிக்கொண்டு, மக்களுக்கு ஆழமான அரசியல் நிலமைகளைக்கொண்டு செல்ல வேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை அரசியலில் இறங்கப்போவதில்லை என்றாலும் கூட தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் ஒரு கூட்டணி ஒன்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இந்த கூட்டணியில் தமிழ் தேசிய மக்கள் முண்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் உட்பட பொது அமைப்புக்களும் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.