குமுதினிப் படகுச் சேவை நேரம் குறைக்கப்பட்டமையினால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இதுவரை காலமும் நெடுந்தீவில் இருந்து காலை 7.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும் குறிகாட்டுவானிலிருந்து முற்பகல் 9.30 மணி மற்றும் மாலை 4 மணிக்கும் 4 தடவைகள் சேவையில் ஈடுபட்ட குமுதினிப்படகு தற்போது குறிகாட்டுவானிலிருந்து முற்பகல் 9.30 மணிக்கும் நெடுந்தீவிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கும் என 2 சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது பயணிகள் காலை 7.30 மணிக்கும் பிற்பகல் 4 மணிக்கு தனியார் படகுகளிலேயே பெரும் சிரமத்தின் மத்தியில் பணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
துறை முகம் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே படகுசேவை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் இக் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாதது எனப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடும் காற்று மற்றும் கடற் கொந்தளிப்பிலும் மற்றும் மழைக் காலத்திலும் பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஏற்ற ஒரேஒரு படகு சேவையாக குமுதினிப் படகு காணப்படும் நிலையில் தற்போது சேவைகளை வழங்குவதற்கு பொருத்தமற்ற திறந்த படகுகளில் கொட்டும் மழையில் நனைந்தபடி பயப்பீதியில் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இறங்கு துறையினை ஒழுங்கமைத்து மக்களுக்கான சேவையினை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை, ஆகியவற்றிற்குரியன. இதனைக் காரணம் காட்டி படகு சேவையினை குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் குறித்த செயற்பாடு தனியார் படகுகளுடன் இணைந்து திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் மக்களால் வெளியிடப்படுகின்றன.
உரிய அதிகாரிகள் குமுதினிப் படகுச் சேவையினை வழமை போன்று மக்களின் நன்மை கருதி 4 தடவைகள் ஈடுபடுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.