அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசிய சுற்றுப்பயணம் தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, அநாகரீகமான முறையில் தண்ணீர் குடித்தார்.
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நாடு திரும்பிய அவர் இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக தொலைக்காட்சியில் நேரடியாக உரை நிகழ்த்தினார்.
அப்போது அவருக்கு திடீர் தாகம் ஏற்பட்டது. இதனால் பக்கத்தில் தண்ணீர் பாட்டில் ஏதும் இருக்கிறதா? என்று தேடினார். அவர் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு கீழே சிறிய பெஞ்சில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உதவியாளர் அதை அவருக்கு சுட்டிக்காட்டினார்.
உடனே தண்ணீர் பாட்டிலை குனிந்து எடுத்த டிரம்ப் அதன் மூடியை திறந்து தண்ணீர் குடித்தார். அவர் தண்ணீர் குடிக்க பாட்டிலை வாயின் அருகே கொண்டு வரும்போது உதட்டை ஒரு மாதிரியாக நெளித்து பின்னர் தண்ணீர் குடித்தார். இது அநாகரீகமாக இருப்பது போல தோன்றியது.
டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சியில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட நேரத்தில், அவருக்கு எதிராக அந்த கட்சியில் செனட் உறுப்பினர் மார்கோரூபியோ போட்டியிட்டார். அவர் 2013-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோது இதேபோல அநாகரீகமான முறையில் தண்ணீர் குடித்தார். அதை அப்போது கிண்டல் செய்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அடுத்த தடவை மார்கோரூபியோ தம்ளரில் தண்ணீர் வைத்துக் கொண்டு குடிக்கட்டும். அவருடைய நடவடிக்கைகள் எதிர் நிலையை ஏற்படுத்திவிடும் என்று கூறியிருந்தார்.
குடியரசு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும்போது டிரம்பின் போட்டியாளராக மார்கோரூபியோ களமிறங்கியபோது அவரை பற்றி டொனால்டு டிரம்ப் கிண்டலடித்து பேசினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் தண்ணீர் பாட்டிலை எடுத்து மார்கோரூபியோ போல தண்ணீரை குடித்து கிண்டலடித்து பேசினார். பின்னர் அந்த தண்ணீர் பாட்டிலை அங்கும், இங்கும் வீசினார். இறுதியாக பாட்டிலை மேடையிலேயே தூக்கி எறிந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அநாகரீகமான முறையில் டொனால்டு டிரம்ப் தண்ணீர் குடித்தார். இதை அமெரிக்க பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மார்கோரூபியோ சம்பவத்தை ஒப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.