கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே இந்திய அணியின் ராகுல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது.
மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆடுகளம் மூடப்பட்டு, புல் தரையில் இருந்த தண்ணீர் எந்திரம் மூலம் வெளியேற்றப்பட்டது. ஈரப்பதம் குறைந்த நிலையில், ஒரு மணியளவில் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சண்டிமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சுமார் 4 மணி நேர தாமதத்திற்குப் பிறகு 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர். முதல் ஓவரை இலங்கை அணியின் சுரங்கா லக்மல் வீசினார். அதை ராகுல் எதிர்கொண்டார். முதல் ஓவரின் முதல் பந்தை ராகுல் தடுத்து ஆட முயற்சித்தார். ஆனால் பந்து அவரது பேட்டில் உரசி சென்று இலங்கை அணியின் டிக்வெல்லாவிடம் சென்றது. அவர் அந்த பந்தை பிடித்தார். இதன்மூலம் முதல் பந்திலேயே ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத்தொடர்ந்து புஜாரா – தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். 7-வது ஓவரை லக்மல் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் தவான் போல்டாகி வெளியேறினார். இதன்மூலம் இந்திய அணி 7-வது ஓவரில் 13 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. தவான் 8 ரன்கள் எடுத்தார்.
அடுத்து புஜாராவுடன் – விராட் கோலி ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். 8.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புஜாரா 8 ரன்களுடனும், கோலி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.