இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று (20) இலங்கை அணிக்கு 231 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (19) ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்கள் பெற்றிருந்த இந்திய அணி, இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இந்திய அணி சார்பில் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை பெற்றார். 29 வயதான கோலி சர்வதேச போட்டிகளில் பெற்ற 50 ஆவது சதம் (ஒரு நாள் 32, டெஸ்ட் 18) இது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக இந்திய அணி 352 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
விராத் கோலி 104
சிக்கர் தவான் 94
லோகேஸ் ராகுல் 79
தசுன் சானக 3/76
சுரங்க லக்மால் 3/93
இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சுமார் 30 ஓவர்களையே எதிர்கொள்ள வேண்டியுள்ளதோடு, பிற்பகல் 4.00 மணியளவில் சீரற்ற காலநிலை காரணமாக ஒளியின் அளவு குறைவடையும் நிலையும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றது.