இளம் தலைமுறையினரே இலங்கையின் எதிர்காலம் என்பதுடன், பாதுகாப்பான மற்றும் விருத்தியான சூழலில் வழங்கப்படும் தரமான கல்வியிலேயே எதிர்காலம் தங்கியுள்ளதென அமெரிக்காவின் பிரதித் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமெரிக்கா அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஒன்றிணைந்த மற்றும் நல்லிணக்கமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக அமெரிக்க அரசாங்கம் அதன் தூதரகம் வாயிலாக ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும்; ரொபர்ட் ஹில்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், நல்லாட்சி மற்றும் சட்ட வழி செயற்படல், அனைவருக்கும் சமவுரிமை மற்றும் சமவாய்ப்புக்காக செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமெரிக்காவின் பிரதித் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் இந்த தருணத்தில் அமெரிக்கா அவர்களுக்கு தேவையான வகையில் உதவபோவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நோக்கிற்கான ஒரு அங்கமாக பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அமெரிக்காவின் பிரதித் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் புதிய கருத்துக்களை ஆராயவும், பழைய எண்ணங்களை சவாலுக்கு உட்படுத்தவும் தேவையான பாதுகாப்பான சூழலை புதிய பாடசாலை கட்டடங்கள் உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்