டயகம பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட, பிரதேசவாசிகள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை கல்வி பயிலும் 42 ஆண், பெண் மாணவர்கள் இன்று டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனையவர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டயகம மேற்கு பிரிவு ஆலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பூஜையின் போது வழங்கப்பட்ட அன்னதானம் உண்டவர்களே இவ்வாறு உணவு ஒவ்வாமைக்கு உள்ளாகியிருப்பதாகவும், இவர்களில் இது வரை 41 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஒரு மாணவர் மாத்திரம் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது குறித்து பொது மகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
ஆலயத்திற்கு மேல் பகுதியில் கடந்த பல வருடகாலமாக கிருமிநாசினி கலவை செய்வதற்கு தண்ணீர் எடுக்கும் இடமொன்று உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி உணவு சமைத்ததாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகவும், இதனால் பலர் கடந்த ஞாயற்றுக்கிழமை முதல் வயிற்று வலியாலும் வயிற்றோட்டத்தாலும் அவதியுறுவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பொது சுகாதார உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.