வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே அவர்கள் தனது பிறந்த தினத்தினை யாழ் கைதடியில் அமைந்துள்ள சாந்தி நிலையத்தில் தங்கியுள்ள முதியோர்களுடன் கொண்டாடினார்.
நேற்று முன்தினம் இரவு ஆளுநர் அலுவலக பணியாளர்கள் சகிதம் அங்கு சென்ற ஆளுநர் அங்கு தங்கியுள்ள அனைத்து முதியவர்களுக்கும் இரவு நேர உணவினை வழங்கி அதன் பின்னராக அவர்களுக்கான இசைவிருந்தினையும் வழங்கி வைத்தார்.
முதியவர்களின் வேண்டுகோளின் பேரில் தமிழ் மொழியில் வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் உருவான மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது…. என்ற பழைய பாடலையும் மற்றும் சிங்கள மொழிகளில் ஒரு பாடலையும் பாடினார்.
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் சாகித்திய இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை பாடிய அவர். பார்வையற்றோர் இசைக்கருவிகளை திறமையான முறையில் கையாழ்வதனை இட்டு தாம் வியப்படைவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாந்தி நிலைய பொறுப்பதிகாரி, ஆளுநரின் செயலர் இளங்கோவன், மற்றும் யாழ் மாவட்டத்தில் அனைத்துப் பகுதி முதியோர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.