தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் முதலாவது நாள் நேற்றைய தினம் எழுச்சியுடன் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள முதல் மாவீரர் சங்கரின் நினைத்தூபியில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.
வடமராட்சி மாவீரர் ஏற்பாட்டுக்குழுவால் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் முதல் மாவீரர் சங்கரின் நினைத்தூபி சிரமதானப் பணி நிறைவு செய்தபின் வெண்நிற வர்ணம் பூசி நினைவுத்தூபி அலங்கரிக்கப்பட்டது.
இதன் பின்னர் நேற்றைய தினம் மாலை குறித்த நினைவு தூபியடியில் கூடிய பொதுமக்கள் மற்றும் அயலவர்கள், உறவினர்கள், குறித்த நினைவு தூபியில் தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தார்கள். இதற்கு முன்னதாக மற்றுமொரு மாவீரரான பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி பிரதான நினைவு சுடரை ஏற்றி அஞ்சலிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நினைவு நிகழ்வுகளில் யுத்தத்திற்கு பின்னர் முதல் முறையாக மாவீரர்களான சங்கர், மாலதி, பண்டிதர் மற்றும் பல மாவீரர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. இதனால் குறித்த பகுதிகளில் புலனாய்வு பிரிவினரின் கடுமையான கண்காணிப்பும் பொலிஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டு காணப்பட்டிருந்தது.
குறித்த தூபியில் மாவீரர் வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வுகள் அரசியல் கலப்பற்றவை எனபதுடன், நாங்கள் எமது பிள்ளைகளையும் அவர்களது தியாகங்களையுமே நினைவு கூறுகின்றோம்.
ஆகவே அரசாங்கம் மற்றும் இராணுவம் எமது மாவீரர்களை நினைவு கூறும் போது இடையூறுகள் வழங்க கூடாது என பண்டிதரின் தாயார் கோரியுள்ளார். இந்த நிகழ்வுகளில் போது தமிழ்த்தேசிய பண்பாட்டு பேரவையும் உடனிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.