நாக்பூர் டெஸ்டில் முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா சதத்தாலும், விராட் கோலியின் இரட்டை சதத்தாலும் இந்தியா முதல் இன்னிங்சில் 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா மற்றும் இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 128 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த புஜாரா சதமும், விராட் கோலி அரைசதமும் அடிக்க நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. புஜாரா 121 ரன்னுடனும், விராட் கோலி 54 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கோலி சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய புஜாரா 143 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. அரைசதம் அடித்த ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேவேளையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். விராட் கோலி 259 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 213 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்கள் குவித்திருந்தது. கோலி அவுட்டான சிறிது நேரத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார். அவர் 160 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். அப்போது இந்தியா 176.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் எடுத்திருந்தது.
அத்துடன் இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 405 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது,