வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி, பருத்தித்துறை சாலை பஸ் சேவை இடம்பெற்றதால், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில், குழப்பநிலை ஏற்பட்டது.
ஊழியர்களை இடமாற்றக் கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே, குறித்த வழித்தடத்துக்கான பஸ் சேவை இடம்பெற்றமைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், அரச பஸ் சேவைகள் அனைத்தும், இன்று (28) வடக்கில் முற்றாக முடங்கியுள்ளன.
இதனால் யாழ். மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையில், பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் இடம்பெற்ற குழப்பநிலையைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.