வடக்கு காஸ்மீரில், டோனி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிரடி வீரர் பூம்பூம் அப்ரிடிக்கு ஆதரவாக கோசங்கள் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவரில் மட்டும் ஆடி வருகிறார்.
இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது டோனி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கும் அவர் சமீபத்தில் காஸ்மீர் மாநிலத்துக்கு சென்றார்.
வடக்கு காஸ்மீர் பகுதியில் அம்மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் டோனி விளையாடினார். பின்னர் ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளித்தார். இந்திய ராணுவ சீருடையில் டோனி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் பூம்பூம் அப்ரிடி மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோசங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவு இல்லாததால் கிரிக்கெட் தொடர் நீண்டகாலமாக நடைபெறவில்லை. ஆனாலும் இருநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை.
அப்ரிடிக்கு இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை விராட் கோலி அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.