காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசாங்கம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்காண விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
குறித்த கலந்துரையாடலின் போதே யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியிலும், யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அவர்களைத் தேடி உறவுகள் சொல்லனாத் துன்பங்களை அனுபவிப்பதாகவும் கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
எனினும் இதுவரையில் அவர்களுக்கு உரிய பதிலை தற்போதைய அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை எனவும் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இழுத்தடிக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு கனடா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும் எனவும் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கனடா அரசாங்கம் இலங்கைக்கு நேரடியாகவும் மற்றும் ஐ.நாவிலும் அழுத்தங்களை வழங்கி வருவதாக கனடா தூதுவர் டேவிட் மைக்கின்னன் இதன் போது தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் கரிசனையாக இருக்கும்’ என்றும் கனடா தூதுவர் டேவிட் மைக்கின்னன் இதன்போது உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.