முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
அரச நிதி தொடர்பிலான முழுமையான நிர்வாகம் பாராளுமன்றத்தை சாரும். எனவே முறிகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் படி ஆணைக்குழுவிற்கு சென்று விடயங்களை தெளிவுபடுத்தியதாக இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.
ஆணைக்குழு விசாரணையின் போது இதுவரை வெளியிடப்படாத பல விடயங்களை எடுத்துக்கூற வேண்டி ஏற்பட்டதாகவும் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போதிருந்த நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விளக்கமளித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நிதிச்சபையின் தீர்மானமின்றி, உரிய முறைமை பின்பற்றப்படாமல் தமக்குத் தேவையான வட்டி வீதத்தினை தீர்மானித்து முதல் நிலை விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் நடைமுறை இருந்ததாகவும் இந்த முறைமை மோசடிக்கு சமமானது என தாம் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்ததாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
தற்போது இடம்பெறும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் 2008 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற விசாரணைகள் இடம்பெற்றால் அவர்களுக்கு லசந்த விக்ரமதுங்க சென்ற பாதையில் செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கும் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.