தலைமையாசிரியை தரக்குறைவாக விமர்சித்தது குறித்து விசாரிப்பதற்காக, ஆறாம் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த 88 மாணவியரின் ஆடைகளைக் களையச் செய்த மூன்று ஆசிரியைகள் மீது பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் இத்தாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஸ்தூரிபா காந்தி பெண்கள் பாடசாலையில், வகுப்பறை ஒன்றில் இருந்து காகிதத் துண்டு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதில், தலைமையாசிரியையும் மற்றொரு மாணவியையும் பற்றி தரக்குறைவான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
இதை எழுதியது யார் என்று ஆறாம் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த 88 மாணவியரை மூன்று ஆசிரியைகள் விசாரித்துள்ளனர்.
எனினும் தமக்குத் தெரியாது என்று அவர்கள் கூறவே, உண்மையை வரவழைப்பதற்காக 88 மாணவிகளையும் ஆடையைக் களையும்படி ஆசிரியைகள் தண்டனை வழங்கினர்.
குறித்த சம்பவம் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றபோதும் இச்சம்பவம் உடனடியாக வெளிவரவில்லை. எனினும் கடந்த திங்களன்று (27) பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் சிலர் இச்சம்பவம் குறித்துப் புகாரளித்தனர்.
எது எப்படியிருந்தபோதும் மாணவியரின் ஆடைகளைக் களையச் செய்தது சட்டப்படி குற்றமாகும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த ஆசிரியைகள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.