இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கான ஐந்து நாள் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமரின் இந்த சீனப் பயணத்தினை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் அலுவலகம், எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி சீனாவுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கு எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரையில் தங்கியிருப்பார் என்று தெரிவித்துள்ளது.
இந்த பணத்தின் போது பல்வேறு விடயங்கள் பேசப்படவுள்ள போதிலும், மனித உரிமைகள் மற்றும் வர்த்தகம் ஆகிய விடயங்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சீனாவுடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுக்களை முன்னெடுப்பதா என்பது குறித்து கடந்த சில மாதங்களாக கனேடிய மத்திய அரசாங்கத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பிரதமரின் இந்த சீனப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.
பிரதமரின் இந்த சீனப் பயணம் குறித்த அறிவிப்பில் தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பிலான விபரங்கள் எவையும் தெரிவிக்கப்படவிலலை என்ற நிலையில், அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதா இல்லையா என்ற முடிவுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கத் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.